Sunday, June 18, 2023

20 Jan 2019

20 Jan 2019
மிக்க நன்றி பாலா. நன்றி அனைவருக்கும். எங்கள் திருமண நாளை சொந்தங்களோடு கொண்டாட வைத்த நேற்றைக்காக. அலங்கரிக்கப்பட்ட பிள்ளையாரும், நிறைந்து இருந்த சிரிப்பு சத்தமும், உணவு விருந்தாகி இலையில் சமைந்து இருந்ததும், சலசலத்த வேட்டிகளும், சேலைகளும், பட்டு பாவாடைகளும், உயிர்பித்தன கால சக்கரத்தில் கரைந்து போய் கொண்டிருக்கும்  நினைவுகளை. நன்றி!

Monday, November 21, 2022


மூன்றாம் வயது !

அறுத்து எடுத்து 
தைத்து பின் பதுக்கிய
என் இருதயத்தில் இருந்து 
நன்றி உங்களுக்கு !

கடந்து போன நிகழ்வுகளில் 
ஒளிந்து இருந்த மகிழ்வும் 
மனதிற்குள் மறைந்து 
போன மௌனங்களாய்
வாழ்க்கை - தன் வண்ணங்களின் 
அழகை தொலைப்பதே இல்லை !

மற்றுமொறு இலையுதிர் காலத்தில் 
நன்றியோடு 
நானே வருவேன் ! 

என்றும் அன்புடன் 
திரு 
Nov 2022

Thursday, October 29, 2020

மறுபடியும் அவள் !


என் கனவுகளில் 
ஒளிந்திருக்கிறாய் காயங்களோடு !

என் காயங்களிலும் 
மறைந்திருக்கிறாய் கனவுகளோடு !

ஒட்டாது போயிற்று என்ற 
உணர்வுகளிலும் அமிழ்திருக்கிறாய் !

நாம் தைத்து கொண்டே இருக்கிறோம் 
நெய்யப்படாத ஆடையை !

தையலின் சுவடுகள் 
இருவரின் விரல்களிலும் !

ஊசியின் ரணம் எனக்கு மட்டுமே !

சின்ராசு 
10/28/2020


Sunday, January 12, 2020

இறுதியின் மறுபக்கம்

ஒரு துளியில் தொடங்கியது !
சென்ற திமிரில்
பதுங்கியிருந்தது  பயங்கள் !

மூன்று வழிச்சாலையில்  வேகத்தடைகள்
மாலையில் வரைபடத்தின்
இடுக்குகளில் கருந்தேள்கள் !

கிழித்தும், குத்தியும், அறுத்தும்
தைத்தும் முழு பிண்டமாய்
துப்பி வெளிவந்தது !

அடர்ந்த இருட்டில் புதையுண்டு
வெளிச்ச வீதியில் மூச்சு !

பிளந்து எடுத்த பாம்புகள்
புதையுண்டு ரத்தம் கக்கின !

பாதாளத்தில் துரத்தி சென்ற
ஓவியம் தரை தொடவேயில்லை !

ஒன்று ஆழமாய்
மற்றொன்று நீளமாய்
சின்னதும் பெரிதுமாய்
பத்து புதைகுழிகளில்
குதறி கொண்டு இருந்தன
கரும்  பேய்கள் !

முடியுரா யுகத்தின்
ஓலங்கள் தொற்றி நின்றது !

செருக்கில்  ஆடிய
தாண்டவத்தின் பாதங்களில்
கண்ணாடிகள் !

கருவறைக்குள்
மறு புக வேண்டும்
கண் மூடி கரைதல் வேண்டும் !

பல யுகங்களுப்பின்
பிண வாடையோடு
பயணப்பட்டன பாம்புகள் !

கருஞ்சாட்டையில் சுழன்று
கம்பீரமாய் வந்து வந்து சென்றாள் !

வாழ்வின் வினோதமான நேரத்தை
அறைந்து சென்றது அன்பென்றது !

தார் எங்கும் தண்ணீர்
பல துளிகளில் மறுபடியும்
ஆரம்பம் !


சின்ராசு
11 ஜனவரி 2020


 


Wednesday, November 7, 2018

நான் ராமன் நீ

நான் ராமன் நீ !

கண்களால் குதறியது
கற்பனைகளில் கலவி
கனவுகளில் புனந்தது
ஒதுக்கிவிட்டால்
நானும் ராமன் தான் !

சதை தின்ற இரவுகளும்
அம்மணமான  பகல்களும்
மௌனமான மனசாட்சியும்
ஒதுக்கிவிட்டால்
நானும் ராமன் தான் !

நீ?

சின்ராசு 
6 Nov 2018

முடியாத தேடல்கள் !

முடியாத தேடல்கள் !

எங்கேயோ எதர்க்காகவோ  தொலைந்து போன நான் !
கனவுகளின் ஆழங்களில்  ஒளிந்து இருந்த நீ !
வெளிறிய முகத்தோடு கரைகடந்த பின்னும்
பதுங்கியிருக்கிறாய் பின்னப்படாத வலைகளில் !

சின்ராசு
6 Nov 2018

Friday, October 26, 2018

மறுபடியும் மரணம் !

சாரக்கட்டைகள் களவாடப்படுகின்றது
யாரென்பது ரகசியம் !

இருண்ட  பகல்கள் அம்மணமான இரவுகள்
தொலைந்து போன தூரங்களில் 
ஒளிந்திருக்கிறது மகிழ்வின் சுவடுகள் !

மாய தருணங்களே இல்லை
உயிர்த்திருக்கும் பொழுதுகளில்
யுகமே  இப்பொழுது !

சந்திப்போம்
மறுபடியும் மரணத்தில் !


சின்ராசு
25 Oct 2018

எப்பொழுது

ஏதாவது செய்யவேண்டும்!

வர்ணங்கள் உணரா கண்களுக்கு
குதறி எறியப்பட்ட  பெண்மைக்கு
உறவுகள்யற்ற உயிர்களுக்கு

கயமையறியா மனதிற்கு
அழிக்கப்பட்ட அடையாளங்களுக்கு
ஒதுக்கப்பட்ட வெள்ளை உடைகளுக்கு

ஏதாவது செய்யவேண்டும்!
எப்பொழுது ?


சின்ராசு
2012

Saturday, June 17, 2017

முகமூடி!

முகமூடியே முகம்
முகமூடியே முகவரி!

சூழலின் சூச்சமத்தில் ஒளிந்திருக்கிறது
அரிதாரத்தின் வர்ணங்களில் படந்திருக்கிறது !

அழித்து பார்த்தாயிற்று
தீ கொண்டு எரித்தும் பார்த்தாயிற்று !
அம்மணமாய் இருக்கும் பொழுதுகளிலும்
அப்பி கொண்டுயிருக்கிறது !

என்று ஏறியது எப்பொழுது இறங்கும்
மரணத்தின் புறவாசலில் விரைத்து இருக்கும்
திரு முகமோ நெசமுகம் !

முகவரியே முகமூடி
முகமே முகமூடி!



சின்ராசு
17 ஜூன் 2017

Sunday, November 24, 2013

புகைப்படம்

புகைப்படம்

நன்றி நண்பா !
பதினைந்து வருட நினைவுகளால் அமிழ்ந்து  போனது நேற்றைய இரவு !

எத்தனையோ நிகழ்வுகள்! வெற்றி, தோல்வி, நட்பு, காதல், பாசம், பயம், காமம், துக்கம், நிஜம், பொய், காற்று, காயம், மழை, மரணம், மௌனம்!
பெற்றவையும் இழந்தைவையும் ஆழி காற்றாய் அறைந்து சென்றது !

நிழற்படத்தில் ராஜா மட்டும் உயிர்ப்பாய் இருக்கிறான். மரணத்தின் புறவாசலில் நான் அவனை சந்திக்ககூடும்!

பதினைந்து வருட பின்னாளில், இன்னும் ஒரு நிழற்படத்தில்
மற்றுமொரு  இரவு கரைந்து போகலாம்!

நினைவுகள் தான் உயிரோ?